ஆர்ப்பரிப்புகள் எதுவுமின்றி அமைதியாய் காட்சியளிக்கிறது யாழ்ப்பாண புகையிரத நிலையம். பாழடைந்துபோய் பல வருடங்களைக் கடந்தும் திருத்தப்படாமல் கவனிப்பரற்ற நிலையில் காணப்படுகிறது.
தண்ணீர் நிறைந்த நிலகீழ் பாதை, புதர்கள் நிறைந்த தண்டவாளங்களைக் கூட யாரும் கண்டுகொள்வதில்லை. உடைந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடத்தின் ஒரு சில பகுதிகளை மரத்தின் வேர்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன.
அந்த வேர் வழியாக வழிந்து சொட்டு சொட்டாய் கொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீர்த் துளிகளைத் தவிர வேறெந்த சத்தமும் அங்கில்லை.
மாலையும் இரவும் சந்தித்துக்கொண்ட பொழுதில் மணி ஆறைத் தாண்டிக்கொண்டிருந்தது. மூளை வளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர் ஒருவர் மாத்திரமே எப்போதும் அங்கு நடமாடிக்கொண்டிருப்பார். அவரையும் காணவில்லை.
யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து தண்டவாளங்களையும் தாண்டி ஒதுக்குப் புறமாக புதரொன்றுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டோம்.
பாம்பு இருக்கும். கவனம் என எப்போதோ, யாரோ சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. எல்லை மீறிய பயத்திலும் அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறியும் ஆவல் மேலிட்டுக்கொண்டிருந்தது.
சலசலப்புச் சத்தம் கேட்கிறது. ச்சீ…ச்சீ…. என 15 வயது மதிக்கத்தக்க சிறுவனின் குரல். புதர்களுக்குள் மறைந்துகொண்டிருந்தவன் தலை மட்டும் வெளியில் காட்டி மீண்டும் ச்சீ….ச்சீ என்று கல்லெறிந்தான்.
ஆம்..! தூரத்தே நாய் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தச் சிறுவனுக்கு இங்கே என்ன வேலை ? எதற்காக இந்த நேரத்தில் இங்கிருக்க வேண்டும் ? மனதில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
இருளில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்த புகைப்படம் Photoshop ஒளியூட்டப்பட்டது.
கொஞ்ச நேரம் மௌனமாகக் கழிகிறது. வெள்ளை வான் ஒன்று வேகத்தைக் குறைத்து புகையிரத நிலைய வாசலுக்கு அருகில் நிற்கிறது. அவசர அவசரமாக ஒருவர் இறங்கி வருகிறார். சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர். அவர் வருவதைக் கண்ட சிறுவன் எழுந்து முன்னோக்கி நடக்கத் தொடங்கினான்.
‘எங்கேயடா அவள்?’
‘எவ்வளவு நேரம் அண்ணை?’
‘கொஞ்சம் லேட்டாப்போட்டதடா. எல்லாம் யுகே பார்ட்டிகள். சுமாளிச்சு வந்தன்’
‘அப்படியே இடப்பக்கமாக நடவுங்கோ. நான் கிளம்புறன்’
சிறுவனின் கையில் கொடுத்தது பணமாகத்தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டோம். ஏதோ வாங்கிக்கொண்ட சிறுவன் சினிமாப் பாடலொன்றை முனுமுணுத்தவண்ணம் சிட்டாய் பறந்து மறைந்தான். சிறுவன் காட்டிய பக்கம் வேகமான நடையுடன் விரைகிறார் அந்த நபர்.
நாம் மறைந்திருந்த இடத்தை விட அதிக தூரம் நடந்து சென்றுவிட்டார். அங்கு ஓர் இளம்பெண் நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இருளில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்த புகைப்படம் Photoshop ஒளியூட்டப்பட்டது.
இரவு வேளையாதலால் சரியாக முகத்தைக் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயினும் அங்கு ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது. சுமார் 45 நிமிட நேரம் அவர்கள் தங்களை மறந்திருந்ததை நாம் அவதானித்தோம்.
இவ்வாறு தினமும் நடக்கிறதா அல்லது ஒரு சில நாட்களில் மாத்திரம் நடக்கிறதா என்பதை சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
எப்படியாவது முழுமையான தகவல்களைத் திரட்டி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அதற்காகப் பொறுமையாய் அமர்ந்திருந்தோம்.
அவர்களுடைய வேலை முடிவடைந்ததும் இருவருமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது சுமார் 23 வயது மதிப்பிடலாம்.
தமிழில் பேசிக்கொண்டு வந்தார்கள். அந்த நபரின் ஆதிக்கமே பேச்சில் அதிகமாகக் காணப்பட்டது. லண்டன் கதைகளைப் பற்றியும் அங்குள்ள அனுபவங்களையும் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.
‘எனக்கு நிறைய பணம் இருக்கிறது. அனுபவிக்க வேணும் எண்டுதான் ஸ்ரீலங்காவுக்கு வந்தேன்’ எமது காதுகளில் அழுத்தமாய் விழுந்த வசனங்கள் இவை.
வெளிநாடுகளிலிருந்து வரும் இளைஞர்கள் பலர் நல்ல காரியங்களுக்காக தமது நேரத்தை செலவு செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் செய்யும் தவறுகளால் சமூதாயம் இழிநிலைக்கு இட்டுச் செல்லப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் இளைஞர்கள் சிலர் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோ. பற்குணராசா ஏற்றுக்கொள்கிறார்.
நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா நேரத்தில் தமிழ் இளைஞர்கள் கொழும்பிலிருந்து இளம் யுவதிகளை அழைத்து வந்து யாழில் விடுதிகளில் தங்கியிருந்து சல்லாபம் புரிந்ததை அவர் உறுதிப்படுத்துகிறார்.
எது எவ்வாறாயினும் சமுதாயத்தின் எதிர்காலம் கருதி நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இருளுக்குள் அரங்கேறிக்கொண்டிருக்கும் இவ்வாறான குற்றச்செயல்கள் குறித்து அறிந்து ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் அனைவரும் முன்வருவோம்.
No comments:
Post a Comment