
வரும் ஓகஸ்ட் மாதம், இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய அணி இரண்டு ”டுவென்டி 20”, ஐந்து ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதனிடையே இலங்கை போரில் நடந்த படுகொலை தொடர்பாக, இங்கிலாந்தின் ”சானல் 4” தொலைக்காட்சி வெளியிட்ட குறுந்தகடு உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இங்கிலாந்தில், இலங்கை அணி பங்கேற்ற போட்டிகளின் போது, தமிழ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது அவுஸ்திரேலியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களிடம் ”தி ஏஜ்” நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 81 சதவீதம் பேர், அவுஸ்திரேலிய அணி இலங்கை செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். அதாவது 3,527 பேரில் 2,856 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மூத்த வீரர்கள் உட்பட சிலர், இலங்கை செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் கூறுகையில், விளையாட்டு, அரசியல் இரண்டும் வேறு. அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே பாகிஸ்தான், ஜிம்பாப்வேக்கு செல்லாது. வீரர்கள் விருப்பத்துக்கு இணங்க, இலங்கைக்கும் செல்ல மறுத்து, ஒருசில நாடுகளில் மட்டும் தான் விளையாடுவோம் என்றால், கிரிக்கட் அழிந்து விடும். ஐ.பி.எல். மட்டும் வளர்ச்சியடைந்து விடும் என்றார்.
இதுகுறித்து அவுஸ்திரேலிய தமிழர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ராஜகுலேந்திரன் கூறுகையில், விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்பது சரிதான். ஆனால், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக, தமிழக மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்பு பாதுகாப்பு பிரச்சினை இருந்தது. இப்போது மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதே காரணங்களுக்காகத் தான் முன்பு தென் ஆப்பிரிக்கா, தற்போது ஜிம்பாப்வே, பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. அப்படியிருக்க, இப்போதும் ஏன் அதுபோன்ற முடிவு எடுக்கக்கூடாது. வீரர்கள் அனைவரும் இணைந்து புறக்கணிக்கும் முடிவை அரசிடம் தெரிவிக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment