Wednesday, July 20, 2011

கிளிநொச்சியில் புலிகளின் ஓடுதளத்தில் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படையின் முதல் விமானம்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுபாதையைப் புனரமைத்துள்ள சிறிலங்கா விமானப்படை நேற்றுத் தொடங்கம் அந்த ஓடுபாதையில் விமானங்களை தரையிறக்கத் தொடங்கியுள்ளது.


புதிதாக அமைக்கப்பட்ட இந்த ஓடுபாதையில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்சல் ஹர்ச குணதிலக பயணம் செய்த வை-12 போக்குவரத்து விமானத்தை விமானிகள் விங் கொமாண்டர் சரிக அரநாயக்க, ஸ்குவாட்ரன் லீடர் தர்சன டயஸ் ஆகியோர் நேற்றுக்காலை தரையிறக்கினர்.

விடுதலைப் புலிகளால் பயிற்சிக்காக தயார்படுத்தப்பட்ட சிறிய ஓடுபாதையே இது என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த ஓடுபாதை வை 12 போன்ற இலகு ரக விமானங்களும், அனைத்து வகை உலங்குவானூர்திகளும் தரையிறங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1000 மீற்றர் நீளம் கொண்ட இந்த ஓடுபாதை ஏ-9 வீதிக்கு கிழக்குப் பக்கமாக 7கி.மீ தொலைவில் கிளிநொச்சி படைத்தலைமையகத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கிளிநொச்சி விமான ஓடுதளம் என்று இந்த ஓடுபாதைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இரணைமடு ஓடுபாதைக்கு வடக்கேயுள்ள இந்த விமான ஒடுபாதைப் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இரத்மலானையில் இருந்து போக்குவரத்து விமானங்களை இயக்க சிறிலங்கா விமானப்படை திட்டமிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள வர்த்தக விமானப் போக்குவரத்துக்கு ஒரு வழிக்கட்டணமாக பயணி ஒருவரிடம் இருந்து 7500 ரூபா அறிவிடப்படவுள்ளது.

முதல்முதலாகத் தரையிறங்கிய விமானத்தை கிளிநொச்சிப் படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவும், இரணைமடு விமான ஓடுதள கட்டளை அதிகாரி விங்கொமாண்டர் ஹெய்லி ரூபசிங்கவும் வரவேற்றனர்.

அதேவேளை புலிகளால் அமைக்கப்பட்ட மற்றொரு விமான ஓடுதளமான இரணைமடு ஓடுபாதையும் சிறிலங்கா விமானப்படையால் புனரமைக்கப்பட்டு வருவதுடன், வர்த்தக, இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இரணைமடு ஓடுதளம் பெரிய விமானங்களைத் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment