வாஷிங்டன்: 2001ம் ஆண்டு
செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்
பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய
தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப்
படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன்
அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.
2001ம்
ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்தினர். இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங்கியது.
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெரிக்கப்
படைகள் வேட்டையில் இறங்கின.
இதில் ஈராக், ஆப்கானிஸ்தானில்தான்
பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப்
படைகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர்
உயிரிழந்துள்ளதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.
அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கிறது.
இதில்
அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர்
உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர்களில் 6000
பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர்
ஈராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர்
பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவிர அமெரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த
தகவல்களைத் திரட்டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி
மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1
லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர்
ஈராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர்கள், 12,000 பேர்
ஆப்கானிஸ்தானியர்கள் ஆவர்.
அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரிடம்
சிக்கி உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை.
இருப்பினும் இது 20,000 முதல் 51,000 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 168 பேர் செய்தியாளரக்ள், 266 பேர் மனிதாபிமான பணியாளர்கள் ஆவர்.
அமெரிக்காவின்
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிக்கி இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ளோரின்
எண்ணிக்கை மட்டும் 70.8 லட்சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள்
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment